உலகில் எந்த மொழி முதலில் தோன்றியது?
உலகத்தில் எத்தனை மொழிகள் உள்ளன?
உலகத்தில் இந்த குறிப்பிட்ட மொழியை எத்தனை பேர் பேசுகிறார்கள்?
உலகில் எந்த மொழியை அதிக மக்கள் பேசுகிறார்கள்? என பல வினாக்கள் பல்வேறுபட்ட விடைகள், பல்வேறு விவாதங்கள். அவையெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். எந்த மொழி எங்கெ இருந்தா எனக்கென்ன? அது எப்படி இருந்தா எனக்கென்ன? அதுவாயா எனக்கு சாப்பாடு போடுது? சராசரி மக்களின் மனதில் தோன்றும் எண்ணங்களின் வெளிப்பாடே இவை.
இது கணினி காலம் சார். இப்ப போயி தாய் மொழி, தமிழ் மொழின்னு பேசிக்கிட்டு இருந்தா எப்படி சார்? இனிமேல் இங்கிலீஷ் தெரிஞ்சிருந்தா தான் ஒரு நல்ல வேலை கிடைக்கும். ஏன், உலகத்துல உயிர் வாழணும்னாலும் கூட இங்கிலீஷ் கண்டிப்பாக தெரிஞ்சே இருக்கணும் என்று சவால் விட்டவர்களுக்கு, செருப்படி கொடுக்கும்படி இன்று எங்கும் தமிழ்ப்படுத்தும் வேலை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் தகவல் தொழில்நுட்பத்தை எடுத்து கொண்டால், அனைத்து மென்பொருட்களும் அவரவர் தாய்மொழியிலேயே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதற்கு தமிழ் மொழியும் விதிவிலக்கல்ல.
"நீங்கள் அவற்றில் அவரவர் மொழியில் அதன் செயல்பாடுகள் எளிதாக செய்து பார்க்கலாம்" என்கிறார் நமது மென்பொருளை விற்பனை செய்யும் வித்தகர்.
"அப்படியா...” என்று வாயை பிளந்து நம்மாளு பார்த்து கொண்டே...
"இங்க பாருடா.. எல்லாமே தமிழ்ல இருக்குடா..” தன் நண்பரிடம்.
ஆர்வம் தாங்காமல், "சார் தமிழ்ல என் பேர அடிக்கலாமா?” என்று கேட்க,
"அடிக்கலாமே.. உங்கள் பேர் என்னன்னு சொல்லுங்க?” விற்பனை வித்தகர்.
"இராமசாமி சார்...”
உடனே கணினியில் அடித்து காட்டுகிறார்.
"சூப்பர் சார்...” நம்மாளு மிகவும் வியந்து பார்க்கிறார். இது நடந்தது 2002க்கும் முன் ஒரு கணினி கண்காட்சியில்.
சரி இப்போது என்ன நடக்கிறது. எல்லாரும் தமிழ் தட்டச்சு செய்கிறார்கள். இணையத்தில் பல தமிழ் இணைய தளங்கள், வலைப்பூ, வலைக்காய், வலைப்பழம் என எங்கும் தமிழ் விரவி கிடைக்கிறது.
பாத்தீங்களா சார் தொழில்நுட்பத்தில் நம்ம மொழி எப்படி வளர்ந்திருக்குதுன்னு...
உலக இராட்சத கணினி நிறுவனம் மைக்ரோசாஃப்ட் விண்டோஸை எடுத்துக்கிட்டங்கனா எல்லா சாப்ட்வேரும் தமிழ்ல இருக்குது... அதுபோல லினக்ஸ் சாப்ட்வேரை எடுத்துக்கிட்டீங்கனா அங்கேயும் எல்லாம் தமிழ்ல இருக்குது.... அப்பப்பா என்ன ஒரு அசாதாரண வளர்ச்சி.... பார்க்கும் போதே புல்லரிக்குதே.
அப்படியா சார்... கொஞ்சம் அதெல்லாம் எங்களுக்கு காட்டுங்க சார்னு பாத்தா...
எல்லாமே புதிய புதிய தமிழ் வார்த்தைகள். இது தமிழா? என்று நம்மை மேலும் வியக்க வைப்பதோடு நில்லாமல், எதுவும் நம் அறிவுக்குப் புரிய மறுக்கிறது. இடையிடையே தமிழில் எழுதப்பட்ட சில ஆங்கில சொற்களும், சில ஆங்கில சொற்களும் நமக்குப் புரிவது போல இருக்கிறது. கடைசி வரை தேடி நம் மொழியில் ஒரு வார்த்தைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் பெருத்த ஏமாற்றமே வருகிறது. என்றாலும் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழனின் அடுத்த அப்பாவித்தனமான கேள்வி:
"சரி இந்த வேல எல்லாம் யாரு சார் பண்றது?”
"நாங்கள் உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் சேவையளிக்கிறோம்" என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், லினக்ஸை விநியோகிக்கும் சில நிறுவனங்களும் தங்கள் பரந்த மார்பை நிமிர்த்தி கொண்டு நிற்கின்றன.
சரி, இந்த மொழிகளுக்கு எல்லாம் சேவை வழங்க இந்த இராட்சத மென்பொருள் நிறுவனங்கள் ஏன் இவ்வாறு போட்டி போடுகின்றன என்ற கேள்வி நம் மண்டையைக் குடைந்தெடுக்கலாம்.
"அப்படி என்றால் கேன்யூ ப்ளீஸ் டெல் மீ ஹெவ் டு டெவலப் டமீல் லேங்கவேஜ்?” இவ்வாறு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் இணையத்தில் விவாதித்து கொண்டிருக்கிறான்.
அதற்கு ஒரே பதில் சேவை மனப்பான்மை கொண்ட இந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். இன்றைய தினத்தில் ஒவ்வொரு மொழியும் மென்பொருள் மூலம் தான் வளர போகிறது என்பதை அலசி அறிந்து, அவற்றை வளர்த்தெடுப்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவே நிதர்சனமான உண்மையாகும் என்பதை பெரிய பெரிய மீடியாக்களும் பத்திரிக்கைகளும் இந்த இராட்சத நிறுவனங்களுக்கு தூபம் போடுகின்றன.
ஆமாங்க... இன்றைய நிலையில் ஒரு மொழியை வளர்த்தெடுக்க கணினியின் பங்கு முக்கிய இடம் வகுக்கிறது. இது முத்தமிழுக்கும் மகுடம் சூட்டும் நான்காம் தமிழ். கணினி தமிழ், இணைய தமிழ், தொழில்நுட்ப தமிழ் என எது வேண்டுமோ அதை எடுத்து கொள்ளலாம். எனவே, எதிர்கால தமிழின் வளர்ச்சி மைக்ரோசாஃப்ட், லினக்ஸ் (ரெட்ஹேட், சூசி, உபுண்டு, டீபியன்....), கூகுள் போன்ற பெரிய பெரிய ஜாம்பவன்கள் கையில் தான் இருக்கிறது.
என்னொரு விஷயத்தை கேட்டால், இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். இவ்வாறு வளர கஷ்டப்பட்டு கொண்டிருந்த இந்த மொழிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பணியில் பல சிறு சிறு நிறுவனங்களும் இந்த ஜாம்பவன்களோடு கைகோர்த்து பணிபுரிகின்றன. இதற்காக அவர்களும், அவர்களுக்காகவும் செலவழிக்கப்படும் பணம் பல மில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது.
அப்ப இது ஒரு மகா பட்ஜெட் படம் தான் (கூல்). எனவே இவர்கள் மென்பொருளில் மொழி மாற்றும் முயற்சியில் கட்டாயம் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. தமிழர்களாகிய நாம் இனி இவர்கள் கூறும் வழியில் நடந்து நம் மொழியை வளர்க்க உதவும் இந்த ஜாம்பவான்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய உறுதி எடுப்போம்.
உறுதி எடுக்கனுமா? எப்படி அவர்களுக்கு நாம் உதவுவது என்று மண்டையை சொரிகிறார்களா?
வெரி சிம்பிள் ஜென்டில் மேன்... (இங்கு இயக்குனர் சங்கரை நினைத்தே ஆக வேண்டும் மகா பட்ஜெட்டிலேயே வளர்ந்தவர். அதன் மூலம் வெற்றியும் அடைந்தவர். அதன் வழியே மேலே பார்த்த விஷயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தப் பணியிலும் வெற்றி நிச்சயம்)
இனி நம் குழந்தைகளை தமிழ் வழி கல்வியை மட்டும் கொடுப்போம்.
கான்வென்ட்களை இழுத்து மூடும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கணினியிலும் தமிழ் மென்பொருட்களையே நிறுவ வேண்டும் என அடம்பிடிப்போம்.
"தமிழை எப்படி வளர்க்க வேண்டும்" என்று விவாதங்களை முடிவுக்கு கொண்டு வந்து மேலே குறிப்பிட்ட அமெரிக்க இராட்சத மென்பொருள் நிறுவனங்களுடன் சேர்ந்து கைகோர்த்து கொண்டு அவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவோம்.
இப்படி பல வழிகள் உள்ளன என சொல்லும் போதே நம்மாளுக்கு வயித்துல புளி கரைப்பது தெரிகிறது. என்னங்க சொல்றீங்க... இதல்லாம் சாத்தியமாகுமா?
ஏய் முட்டாளே, நம் மொழியை வளர்த்தெடுப்பதில் அமெரிக்ககாரனுக்கு இருக்கும் அக்கறையில் ஒரு துளிக்கூட இல்லையெனில் நாம் எங்கு போய் அடித்து கொள்வது என்று நம் தமிழ் சினிமா கதாநாயகர்கள் போல கர்ஜிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் இது சினிமா போல 3 மணிநேரத்தில் முடிந்து போகும் விஷயமில்லையே. சிந்திக்க வேண்டும், சிந்தித்தால் மட்டும் போதுமா, விரைவாக செயல்பட வேண்டும்.
ஆங்கிலம் என்னும் மெகா வைரஸ் - எச்சரிக்கை
ஆங்கிலம் என்பது ஒரு வைரஸ். அதற்கு ஆன்டிவைரஸ் இன்னும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே, இந்திய அளவில் இந்தி என்ற ஒரு சிறிய வைரஸ் பல மொழிகளை அழித்து சாதனை படைத்திருப்பது தமிழராகிய நமக்குத் தெரிந்ததே. இன்று தமிழகம் தவிர (தமிழகத்திலும் சில கான்வென்ட்களில் இது நடைமுறையில் உள்ளது) மற்ற மாநிலங்களில் இந்தி கட்டாய பாடமாக கற்பிக்கப்படுகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் இந்தியில் பேசி பிழைத்து கொள்கிறார்கள். நல்ல விஷயம் தானே என்று நீங்கள் கேட்கலாம்.
இவ்வாறு கொஞ்சம் நாளில் தனது மொழியை மறந்து இந்தி மட்டுமே பேசியதால் எடுத்துக்காட்டாக, இராஜஸ்தானி, போஜ்பூரி, மேத்லி... (இந்தப் பட்டியலில் இன்னும் பல மொழிகள் உள்ளன) போன்ற மொழிகள் தங்கள் கலாச்சாரத்தை இழந்து இந்திக்கு அடிமைப்பட்டிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
இந்திய வரலாற்றில் நடைபெறும் இந்த மோசடி இன்று பன்னாட்டு அளவில் ஆங்கிலம் என்ற வைரஸ் மூலம் அரங்கேற இருக்கிறது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு ஆன்டி வைரஸ் இருந்தாலும் இதன் தடுப்பை உடைத்தெறிய கணினி, மென்பொருள், இணையம் என்னும் ஊடகத்தின் வழியாக ஒரு வழித்தடத்தைப் போட்டிருக்கிறது.
ஒரு இலக்கியம், ஒரு படைப்பு, ஒரு தகவல் மொழிபெயர்க்கப்படும் போது அது மொழிபெயர்க்கப்பட்ட மொழியை தெரிந்தவர்கள் இன்னொரு கலாச்சாரத்தை தன் மொழியில் தெரிந்து கொண்டோம் என திருப்தியடையலாம். இன்னொரு நாட்டில் நடக்கும் விஷயம் நமக்கு நம் மொழியில் அறிவிக்கப்படும் போது நாமும் தெரிந்து கொள்கிறோம். எனவே, மொழிபெயர்ப்பு அவசியம் தேவை. எனினும் மொழிபெயர்ப்பு செய்தல் ஒரு கலையாகும்.
ஆனால் மென்பொருள் மொழிபெயர்ப்பில் என்ன நடக்கிறது? (இந்த மென்பொருள் மொழிபெயர்ப்பு என்ற சொல்லே மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலத்தின் எச்சிலை எடுத்த ஏதோ ஒரு மேதாவி தனது எச்சிலையும் குழைத்து ஒரு புதிய எச்சிலை தமிழாக கொடுத்திருக்கிறது.) ஒரு மொழியை முழுவதும் அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு பலவித விதிமுறைகளின் கீழ் மொழிபெயர்ப்பு என்னும் கீழ்த்தரமான செயல் நடந்தேறுகிறது.
ஹார்ட்வேர் என்ற ஆங்கில அசிங்கத்திற்கு வன்பொருள் என்று தமிழன் மொழிபெயர்ப்பு செய்கிறான். ஹார்ட்டிஸ்க் என்றால் வன்வட்டு என்கிறான் ஒருவன், வன்தட்டு என்கிறான் ஒருவன். மேலும் ஒருவன் வன்தகடு தகடு தகடு என்றான். ஒருநாள் ஒண்ணுமே புரியல கணினியில் என்பான் அப்பாவி தமிழன்.
சரி இந்த மொழிபெயர்ப்பு பணிகள் எவ்வாறு திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்று பார்த்தால் அது மிக சுவாரஸ்யமாக இருக்கும்.
இப்போது இராட்சத மென்பொருள் தயாரிப்பாளர் மைக்ரோசாஃப்ட் இந்தப் பணியை ஒரு அமெரிக்காவின் பெரிய மாமா மொழிபெயர்ப்பு நிறுவனத்திடம் (அதாங்க ட்ரான்ஸ்லேஷன் ஏஜென்சி) கொடுக்கும். அவர் உடனே "டமீல் லாங்க்வேஜ்" தெரிந்த சில சிறிய இந்திய மொழிபெயர்ப்பு மாமா நிறுவனங்களிடம் கூவிக் கூவி ஏலம் விடுவார். அந்த வேலையை எடுத்து அதனை சில மொழிபெயர்ப்பு கூலிகளிடம் கொடுத்து செய்ய சொல்லி அவற்றை முடித்து திரும்ப அந்த பெரிய மாமா நிறுவனங்களிடமே கொடுக்க வேண்டும்.
அங்கு ஒருவர் கணினி பொட்டியில் இந்த மொழிபெயர்ப்புகளை போட்டு பொத்தானை தட்டுவார். அந்த பொட்டி ஏதாவது தப்பா இருக்குன்னு துப்பிவிட்டது என்றால் உடனே இதெல்லாம் தப்பாக இருக்கிறது இதனை மறுபார்வையிடுங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார். இங்கு தான் ஒன்றை சொல்ல வேண்டும். தமிழன் தமிழ் மொழிபெயர்ப்பு செய்ததை சரி பார்ப்பது ஒரு ஆங்கிலேயன் என்ன கொடுமை சார் இது.
இப்போது இங்கு அதனை பார்க்கும் போது அவை சரியாக தான் இருக்கும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
“information” என்பதை “info” என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதுவார்கள். இதற்கு தகவல் என்று பொருளாகும். எனவே, இதனை தகவல் என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் சரியாக மொழிபெயர்த்துள்ளார். அதற்கு ஆங்கிலேயனிடம் இருந்து வந்த செய்தி என்னவென்றால், "தகவல் என்றால் சொல் சற்று பெரியதாக இருக்கிறது, இந்தப் பொட்டிக்குள் அடங்க மாட்டேங்கிறது பேசாம "தக" ன்னு போட்டுரு" ஆங்கிலேயனின் கட்டளைக்கு அடிபணிந்து விடுகிறான் தமிழன்.
உடனே, "இந்த தமிழன் தக தக வென ஆடியிருக்க வேண்டாமா அந்த ஆங்கிலேயனிடம்" என்று நீங்கள் ஆத்திரப்படலாம். "எல்லாம் காசு மயம்" பதில் எதுவும் பேச முடியாது. "நீ என்னென்ன கெட்ட வார்த்தைகள் வேண்டுமோ அத்தனையும் அதில் போட்டுக்கோ ஆனா அந்த டப்பாவுக்குள் நிக்கணும் அவ்ளோ தான்”. அதுதான் இவர்களின் மொழிபெயர்ப்பு கொள்கை.
நெருப்பு அடுத்த பதிவிலும் பற்றி எரியும்......
